Wednesday, March 12, 2008

சாத்தானும் சயித்தானும் ஒண்ட தலையும்

திருநெல்வேலியில் இறங்கி ஆத்தூர் போவதற்கு பேரூந்து நிறுத்தகத்திற்கு அவசர அவசரமாக ஓடினேன். ஆத்தூருக்கு போகும் பேரூந்து நிறுத்தும் இடத்தில் இல்லாமல் சற்று தள்ளி பேரூந்து நிறுத்தப்பட்டிருந்தது. பேரூந்தின் முகப்பிலும் பேர் பலகையை காணவில்லை.

இது ஆத்தூர் போகும் பேரூந்து தானா என்று ஒரு சந்தேகம்.

பேரூந்து விசாரனை கூட்டில் சில பேரூந்து ஓட்டுனர்கள் இருப்பதைக் காணவே சென்று கேட்டேன். “இந்த பேரூந்து ஆத்தூர் போகுமா?”

ஒருவர் கூறினார் “எனக்குத் தெரியாது.”

மற்றவர் “கொஞ்சம் பொறுங்கள் யாரிடமாவது கேட்டுச்சொல்கின்றேன்.”

சரி வேறு யாரிடமாவது கேட்டுப் பார்க்கலாம் என்று திரும்பும் போது ஒருவர் தென்பட்டார். அவரும் பேரூந்து ஓட்டுனர் போல் தான் தெரிந்தார். அவரிடம் கேட்டேன். ஐயா இந்த பேரூந்து ஆத்தூர் போகுதா?

“ஒண்ட தலைக்கு போகுது”. பதில் கடுகடுப்பாக வந்தது.

ஆமாம், தனக்குத் தெரியாது வேறு யாரிடமாவது கேட்டுப்பாருங்கள் என்று கூறும் மனப் பக்குவம் கூட இல்லாது, தனக்கு தெரியாது என்பதை வெளிப்படையாக கூற விரும்பாத இதுப்போன்றவர்களால் தமது அறியாமையை மறைப்பதற்கு உதிர்க்கும் சொற்களே இவை.

நீங்களும் இதுப்போன்ற நபர்களை சந்தித்திருக்கலாம். கேள்விக்கேற்ற பதிலின்றி எடக்கு முடக்கான பதில் அளிப்பார்கள். உண்மையில் தனக்கு தெரியாது என்பதை 'தெரியாது' என்று ஒத்துக்கொள்ளும் மனப்பக்குவம் கூட அற்ற மடையர்கள். அந்த அறியாமையின் வெளிப்பாடே ஆத்திரமான பதில்களாக "ஒண்ட தலைக்கு போகுது" போன்ற வார்த்தைகளாக வெளிவருகின்றது.

இன்னும் சிலர் உள்ளனர், தனக்கு தெரியாது என்பதை 'தெரியும்' என்று கூறி தமது பிற்போக்கு சிந்தனைகளை மற்றவர்களில் புகுத்த முனைபவர்கள். பிளையாக வழிகாட்டி விடுவர்கள்.

இதுப்போன்றதே மதங்களும்.

பிளையான வழிக்காட்டல்களை எந்தவித பகுத்து ஆய்வுகளும், பகுத்தறிவும் இன்றி அப்படியே அதை சத்தியம் என்றும் நம்பிவிடுகின்றனர்.

இவ்வாறு நம்புகின்றவர்களையே பிழையான வழிக்காட்டிகளுக்கும் மிகவும் பிடிக்கும். தமது வழிகளை இவர்கள் தொடர்ந்தும் பின்பற்ற வேண்டும் என்பதால், உலக அறிவியல் ஆதாரங்களைக் கூட தமது பொய் பிரச்சாரங்களுக்காக ஏற்றாற்போல் திரிபுபடுத்தி அதையும் தமது மத சார்பு கருத்துக்களாக முன் வைப்பர். இதுவே சத்தியம் சத்தியம் என்றும் புனிதம் புனிதம் என்றும் போற்றுவர்.

இந்த கருத்துக்கள் ஏற்கக் கூடியதாக இல்லயே என்று யாரும் கேட்டுவிட்டால். இப்படியல்லாம் கேட்கக் கூடாது. இப்படியெல்லாம் கேட்பது இறைவனை இகழ்வதாக இருக்கும் என்று அவர்கள் அறிவையே முடக்கி விடுவர்.

இவர்களின் மூடக்கருத்துக்கு எதிரான கருத்துக்களை வளரவிடாமல் செய்வதில் தமது அறிவை பயன் படுத்தியே தம்மையும் மூடனாக்கி தம்மை சார்ந்தவர்களையும் மூடர்களாகவே காலாகாலமாக வைத்துக்கொள்வர்.

யாராவது அதையும் மீறி கேள்விகள் கேட்டால்.

"ஒண்ட தலைக்கு போகுது” என்பதுப் போல் “நீ இப்படியெல்லாம் கேள்வி கேட்கின்றாய் இதை நீ கேட்கவில்லை சாத்தான் உன்னை இப்படி கேட்கவைக்குது." என்றும் "இதுப்போன்ற கேள்விகளை எழுப்பப்படுவது சாத்தானின் வேலை" என்றும், இல்லாத சாத்தானையும் சயித்தானையும் கூறி பதில் கூறு முடியாத விடயங்களுக்கு பதிலாக கூறிவிடுவர்.

தொடர்ந்தும் மக்களை சிந்திக்க விடாது, உண்மையை அறிய விடாது சாத்தான் சயித்தான் என்று அச்சுறுத்தி பயமுறுத்தி தாமும் எதையும் பகுத்து அறியாமல், தம்மை சார்ந்தவர்களையும் பகுத்து அறியவிடாமல் தொடரும் மூடக்கருத்துக்களின் பிரச்சாரங்கள் என்று ஒழியப்போகின்றதோ? இவர்கள் தம் மதங்களை காப்பாற்றிக்கொள்வதாக நினைத்து தம் சமுதாயத்தையே மூடர்களாக்கிக்கொள்கின்றார்கள்.

உண்மையில் சாத்தானும் சயித்தானும் என்பது தமது மார்க்கங்களின் புதைந்து கிடக்கும் மூடக்கருத்துக்களுக்கு அறிவியல் ஆதாரங்கள் அளிக்க முடியாத நிலையில், பகுத்து அறிந்துப் பார்க்கும் மனிதர்களின் கேள்விகளில் இருந்து தம் கருத்துக்களை நியாயப்படுத்துக்கொள்ள அல்லது கேள்விகள் வராமல் தடுத்துக்கொள்ள உபயோகிக்கும் ஒரு தந்திரோபாய கவச சொற்கள் மட்டுமே இவைகள்.

No comments: